ஆத்தியடி பிள்ளையார் கோவில் - புனர் நிர்மாணம்

எங்கிருந்தேனும் உன் அடியார் உன்னை நினைத்திட்டால், அங்கே வந்து அவர் தம்மோடும் உடனாகி அவர் இடர் தீர்க்கும் ஆத்தியடியானே, உன்னருள் கொண்டே இந்த புனர் நிர்மாணத்தைச் செய்யத் துணிந்தோம். முன்னவனே நீ முன்னின்றால் முடியாதது ஒன்றில்லை. ஆகையால் ஐங்கரனே இந்த வேலையை துரித கதியில் சிறப்பாக நடைபெற்று முடிய அருள் தாரும்.

விக்கிரகத்தின் கீழ் இருக்கும் யந்திரமாகிய ஆதர சக்தியே மூர்த்தி கரத்தைக் கொடுப்பது. இது பன்னிரண்டு வருடங்கள் வரை பூரண பலனைக் கொடுக்கும். அதன் பின் புதிதாகச் செய்து வைக்க வேண்டும். இதனால் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை குமபாவிடேகம் செய்வர். பாலஸ்தாபனம் செய்யும் போதுதான் கோயில் உள்ளே ஏதாவது திருத்த வேலைகள் செய்யலாம்.

இவ்வளவு காலமும் நடைபெற்ற கும்பவிடேகங்களின் போது சிறு சிறு திருத்தங்களே செய்தார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன் சுண்ணாம்பால் கட்டிய கட்டிடம் இப்போது உறுதியில்லாமல் பழுதடைந்த நிலையில் இருக்கிறது. எனவே மிக முக்கியமான கட்டிடங்களை மட்டும் திருத்தி அமைக்க உள்ளார்கள். முழுவதும் திருத்துவதற்கான மதிப்பீடு ரூபா 350 லட்சம். இப்போது அத்தியாவசியமான நிர்மாண வேலைக்கு சுமார் 150 லட்சம் ரூபா செலவாகும். நாளுக்கு நாள் விலைகள் கூடுவதால் மதிப்பீட்டிலும் பார்க்க கூடவே முடியும்.

தேவர்களும் வந்து வழிபடும் கோயில் இது என்று முன்னோர் கூறுவார். சிலர் நடுச் சாமத்தில் அவ்வழியே போகும்போது புசையைக் கண்டதாகவும் , சிலர் வீட்டில் இருந்தபடியே மங்கள வாத்திய ஒலியைக் கேட்டதாகவும் கூறுவார். இப்படியான மூர்த்திகரம் உள்ள கோயிலுக்கு தம்பசெட்டியில் இருந்து தும்பளை வரை உள்ள நாங்கள் எல்லோரும் ஏதோ ஒருவகையில் உருத்து உள்ளவர்களே ஆவோம். இந்தப் பணி விரைவில் நடைபெற்று கும்பவிடேகம் காண ஒத்துழைத்து பிள்ளையாரின் பூரண அருளைப் பெறுவோமாக!

சத்தியராதா சபாபதிப்பிள்ளை
ஆத்தியடி பிள்ளையார் கோவில்

No comments: